ரூபாயின் மதிப்பை சந்தை சக்திகளே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியா தனது போட்டித்திறன், செயல்திறன் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மூத்த வங்கியாளர் உதய் கோட்டக் தெரிவித்தார்.
புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் பேசிய அவர் பேசியதாவது:ரூபாய் அதன் இயல்பான மதிப்பை எட்ட அனுமதிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. காலப்போக்கில் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான வலிமை நாணய மதிப்பில் பிரதிபலிக்கும்.
தற்போதைய சூழலை முக்கிய சமிக்ஞையாகக் கருதி, இந்தியா போட்டித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்த வேண்டும். தற்சார்பை வலுப்படுத்துவதுடன், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.
நாணய மதிப்பை சந்தை சக்திகள் தீர்மானிக்க அனுமதிப்பது முக்கியம். ரூபாயின் குறிப்பிட்ட மதிப்பை கொள்கை வகுப்பாளர்கள் பாதுகாப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடாது. சந்தையில் எது பயனளிக்கும் என்பதை நடைமுறை அனுபவமுள்ளவர்கள் அறிவார்கள். அதிகாரப்பூர்வ தலையீடுகளை சந்தை முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்பைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
ரூபாய் சரிவைக் கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு சிறப்பு டாலர் பரிவர்த்தனை வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்ததுடன், அந்நியச் செலாவணி ஊக வணிக விதிகளையும் கடுமையாக்கியது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ரூபாய் தொடர்ந்து மூன்றாவது நாளாக வலுப்பெற்று, டாலருக்கு எதிராக 40 காசுகள் உயர்ந்து ரூ.95.38-ல் நிறைவடைந்தது. திங்கள்கிழமை ரூபாய் 93 காசுகள் உயர்ந்து ரூ.95.78-ல் நிறைவடைந்திருந்தது. இது ஆறு மாதங்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகப்பெரிய ஒருநாள் உயர்வாகும்.